காத்தான்குடி நகரசபை ஆட்சியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றுதல் ஊருக்கு அவசியமாகும் –முபீன்

(ஆதிப் அஹமட்)

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் காத்தான்குடி நகரசபையின் ஆட்சியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.

காத்தான்குடி நகரசபை பிரதேசத்தின் முதலாம் வட்டாரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களுடனான சந்திப்பு கடந்த 05.11.2017 அன்று காத்தான்குடி கடற்கரை கடாபி திருமண வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.இதில் உரையாற்றும் போதே முபீன்   மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்

காத்தான்குடி பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரஸுக்கான ஆதரவுத்தளம் தற்போது அதிகரித்துள்ளது அதே வேளை நாம் தரமானவர்களை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டியுள்ளது.தங்களை ஆளப்போகின்றவர்கள் தகுதியானவர்களாகவும் தரமானவர்களாகவும் இருக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.அத்துடன் வெறும் வாய்ப்பேச்சில்லாமல் செயற்திறன் கொண்டவர்களையே மக்கள் விரும்புகின்றனர்.எனவே ஒவ்வொரு வட்டாரங்களிலும் மிகத்தரமான வேட்பாளர்களை களம் இறக்குகின்ற போது காத்தான்குடியின் நகர ஆட்சியை கைப்பற்றுவது இலகுவான காரியமாக அமையும்.

 

மேலும் கடந்த காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பல்வேறு செயற்பாடுகளை நமது பிரதேசத்தில் முன்னெடுத்து வருகின்றது.தற்பொழுது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்களின் அயராத முயற்சியின் காரணமாக காத்தான்குடிக்கான பாரிய கழிவு நீர் முகாமைத்துவ செயற்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இவ்வேலைத்திட்டம் தொடர்பில் நான், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் என்ற அடிப்படையில் பல்வேறு முன்னெடுப்புக்களை அமைச்சு மட்டத்திலும் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களோடு இணைந்த வகையில் மேற்கொண்டு வருகின்றேன்.இத்திட்டம் தொடர்பான சுற்றாடல் சாத்திய வள அறிக்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் நிபுணர்களுடன் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உயர்மட்ட அதிகாரிகளும் இணைந்து ஆய்வுப்பணியில் ஈடுபட்டு அறிக்கை முடியும் தருவாயிலுள்ளது.

 

நமது சமூகத்தை சேர்ந்த ஒருவர் குறித்த விடயத்துக்கான அமைச்சராக இருப்பதன் காரணமாகவே இத்திட்டத்துக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது.ஐக்கிய அமெரிக்க டொலர் 78,968,468.36 செலவில் மேற்படி திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.மிகப்பாரிய நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் முதன்முதலில் கிழக்கு மாகாணத்தில் நமது ஊரிலேயே நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

 

ஆக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நகரசபை ஆட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கைகளுக்கு கிடைக்க வேண்டும்.காத்தான்குடியின் ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு வீதியும் இத்திட்டத்தில் உள்வாங்கப்படவுள்ளது.எனவே நமது ஊரின் முக்கிய தேவையை சரியான முறையில் நிறைவேற்றிக்கொள்ள காத்தான்குடி நகரசபை ஆட்சியை நாம் கைப்பற்ற வேண்டும்.எனவே இங்கே வந்திருக்கிற சகோதரர்கள் மிகத் தரமான ஒருவரை தங்கள் வட்டாரம் சார்பாக தெரிவு செய்து தரவேண்டும் என்று முபீன் மேலும் தெரிவித்தார்.

 

மேற்படி கலந்துரையாடலில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்,முன்னாள் காத்தான்குடி நகரசபையின் தவிசாளர் மர்சூக் அஹமட் லெப்பை உற்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a comment

Your email address will not be published.


*