5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய நிந்தவூர் அல்-மினா வித்தியாலய மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு.

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
இவ்வருடம் நடைபெற்ற 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய நிந்தவூர் அல்-மினா வித்தியாலய மாணவர்களையும், அவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு மினா வித்தியாலய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

ஆரம்பப் பிரிவு பகுதித் தலைவர் எம்.சஹீட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வித்தியாலய முதல்வர் எம்.எல்.எம்.நிஹார்தீன் கலந்து கொண்டு, சிறப்பித்தார்.


மேலும் இந்நிகழ்வில் பிரதி அதிபர் ஏ.எஸ்.றியாஸ் அஹமத், உதவி அதிபர் ஏ.இஸ்மாலெப்பை, இடைநிலைப் பிரிவுத் தலைவர் எம்.வைத்துல்லாஹ் ஆகியோருடன், ஏனைய ஆசிரிய, ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர், மாணவர் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இந்நிகழ்வில் திறமைச் சித்தியெய்தி பாடசாலைக்கும், பெற்றோருக்கும் புகழைச் சேர்த்த சாதனை வீரர்களான எம்.ஐ.கனாசுல்லாஹ்(173புள்ளிகள்), கே.எம்.றாஷித் முஹம்மட்(168 புள்ளிகள்), ஏ.பி.எம்.அம்மார் அஸ்லிப்(158 புள்ளிகள்) ஆகிய மூன்று மாணவர்களையும், இவர்களோடு பரீட்சை எழுதி 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 25 மாணவர்களையும், இவர்களுக்கு நல்லறிவையும், நல்லொழுக்கத்தையும் போதித்த ஆசிரியப் பெருந்தகைகளான திருவாளர் எம்.சஹீட், திருமதி.ஜெஸ்மி நஜீம், நெறிப்படுத்திய கல்லூரி முதல்வர் எம்.எல்.எம்.நிஹார்தீன் ஆகியோர்களுக்கும் பரிசுப் பொருட்கள், சான்றிதழ்கள், நினைவுச் சின்னங்கள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டன.

கல்லூரி முதல்வர் நிஹார்தீன் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- ‘கடந்த கால வரலாறுகளைப் பார்த்ததில் ஒரு உண்மை வெளிப்படுகிறது. 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சைகளில் சித்தியெய்திய மாணவர்களில் அதிகமானோர் பிற்காலத்தில் க.பொ.த(சாஃத)த்திலோ, அல்லது உயர்தரத்திலோ அல்லது பல்கலைக் கழகங்களுக்குச் செல்வதில் ஆர்வங் காட்டியதாகத் தெரியவில்லை. காரணம், அவர்கள் 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய போது ஏற்படுகின்ற பெருமையாகும். இப்பரீட்சைதான் எல்லாம் என நினைத்துக் கொண்டு, ஏற்படுகின்ற கர்வத்தால் எல்லாவற்றையும் கோட்டை விட்டு விடுகின்றனர். எனவே, எமது அன்புச் செல்வங்களின் எதிர்கால நலன்களில் பெற்றோர் மிக அவதானமாக இருக்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார்.

 

Leave a comment

Your email address will not be published.


*