தலைநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு…

 

th (1)தலைநகரில் போக்குவரத்து நெரிசல் இன்று பாரிய ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அல்லது இதனால் ஏற்படும் பாதிப்பினைக் குறைப்பதற்கு பல்வேறு விதமான முயற்சிகள் காலத்திற்குக்காலம் எடுக்கப்பட்ட போதும் போக்குவரத்து நெரிசல் குறைந்ததாக இல்லை.

கடந்த திங்கள் முதல் மேல் மாகாண மாநகர அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் புதிய வேலைத் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.

ராஜகிரியவிலிருந்து ஆயுர்வேதச் சந்தி வரை பிரயாணிகள் போக்குவரத்து பஸ்களுக்கு நடு ஒழுங்கை மாதிரித்திட்டம் பரீட்சாத்தமாக அமுல்படுத்தப்பட்டது.

இந்தப் புதிய மாதிரித் திட்டம் பற்றி போக்குவரத்துப் பொலிஸார் பல நாட்களாகச் சாரதிகளைஅறிவூட்டியிருந்த போதும் கடந்த திங்களன்று பெரு நெரிசல் ஏற்பட்டு ஊழியர்களுக்கு அலுவலகங்களுக்குச் செல்வதில் தாமதம் ஏற்பட்டது. மக்கள் பல அசௌகரியங்களையும் எதிர்நோக்கினர்.

நேற்று முன்தினம் இந்த பரீட்சாத்த முறை அமுல்படுத்தப்பட்டது. முதல் நாள் இருந்ததனைவிட நெரிசல் குறைந்துள்ளது.

முதல் நாள் இந்த மாதிரித்திட்டம் பற்றி முச்சக்கரவண்டிகள் முற்றும் துவிச்சக்கரவண்டிகள் சரியாக அறிவூட்டப்படாமையால் நெரிசல் நிலை ஒன்று ஏற்பட்டதாக அநேக சாரதிகள் குற்றஞ்சாட்டினர்.

ஒரு திட்டம் பரீட்சார்த்தமாக மேற்கொள்ளப்படும் போது பலவீனங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததே. அதற்காகவே திட்டங்கள் பரீட்சார்த்தமாக மேற்கொள்ளப்படுகின்றன.

மேல் மாகாண மாநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக கொழும்பு உட்பட புற நகர்களின் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்கு முன்னெடுத்து வரும் பல்வேறு செயற்பாடுகள் பாராட்டுக்குரியன.

போக்குவரத்து நெரிசல் என்பது மக்களுடைய அன்றாட போக்குவரத்துக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதல்ல. நாட்டின் பொருளாதாரத்துடன் பின்னிப் பிணைந்தது. நாட்டில் பிரதான வணிக நகரில் சீரற்ற போக்குவரத்து முறை நீடிக்குமாயின் இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்பினைக் கணக்கிலிட முடியாது.

மனித உழைப்பு வீண் விரயமாகுதல், எரிபொருளுக்கு பெருமளவு செலவாகுதல், தவிர சுற்றாடலைப் பாதிக்கும் வாயு கசிதல் போன்றவற்றைத் தவிர்க்கும் போக்குவரத்து முறைகள் தொடர்பாக நமது நாட்டின் கவனம் இன்றும் சரியாக செலுத்தப்படாதுள்ளது.

நீர்வழிப் போக்குவரத்து மற்றும் புகையிரதப் போக்குவரத்து குறித்து மேலும் கூடுதலான கவனஞ் செலுத்தப்பட வேண்டும்.

கடல் வழியாக வள்ளச் சேவைகளை ஈடுபடுத்துவதன் மூலமும் பாதைகளில் நிலவும் நெரிசலைக் குறைக்கலாம்.

புதிய மார்க்கங்களில் புகையிரதப் பாதைகளை நிர்மாணிப்பதன் மூலம் வீதிப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கலாம்.

இவ்வாறான சேவைகளைப் பலப்படுத்துவதன் மூலம் தலைநகருக்கு தனிப்பட்ட வாகனங்களில் வருவதனைக் குறைக்கலாம்.

மாற்று வழிகளை அறிமுகப்படுத்துவதன் மூலமே வீதிப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும்.

Leave a comment

Your email address will not be published.


*